secretary msg budget 2024

வேலணை பிரதேசசபை
நிகழ்ச்சித்திட்ட வரவு செலவுத்திட்டம் – 2024
செயலாளர் அறிக்கை

உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளூர் மட்டத்தில் பிரதேச மக்களுக்கு பயனுறும் வகையில் நிர்வாகம், பிரதேச மக்களின் பங்குபற்றுதலுடனான நிலைபேறான அபிவிருத்தி அது தொடர்பான தீர்மானம் எடுத்தலில் மக்களுக்கு போதிய சந்தர்ப்பம் வழங்குவதற்காகவே உருவாக்கப்பட்டன. அதனடிப்படையில் எதிர்காலத்தினைப் பற்றி முன் கூட்டியே திட்டமிடுதலும், ஒரு வினைத்திறனுடைய வரவு செலவுத்திட்டத்தினை தயாரித்து அதனை முகாமை செய்ய வேண்டிய சட்ட ரீதியான கடப்பாடும் சபைக்கு உண்டு. இந்த வகையில் வேலணைப் பிரதேச சபையில் செயலாளராக நியமனம் பெற்ற நான் எனது சேவைக்காலத்தில் இரண்டாவது வரவு செலவுத்திட்டமாக 2024 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத்திட்டத்தினை சமர்ப்பிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

பல சிறப்புக்களும் வரலாற்று முக்கியத்துவங்களும் கொண்ட தீவகத்தில் மண்டைதீவு, அல்லைப்பிட்டி, வேலணை, புங்குடுதீவு, நயினாதீவு ஆகிய 5 உப அலுவலகங்களையும் இணைத்து வேலணையில் தலைமை அலுவலகத்தையும் உள்ளடக்கிய பாரிய நிலப்பரப்புடன் கூடிய பிரதேசமே எமது வேலணை பிரதேச சபை ஆகும்.

சுற்றுலா துறையினை மேம்படுத்தும் நோக்கில் மண்டைதீவு, வேலணை மற்றும் குறிகட்டுவான் பகுதிகளில் பல்வேறுபட்ட கட்டுமானங்களை ஏற்படுத்தும் திட்டங்களையும் உருவாக்கி அதற்கான நிதி மூலங்களை திரட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.

சபையினால் ஈட்டப்படும் வருமானங்களை அதிகரிப்பதனை நோக்காகக்கொண்டு வங்களாவடியில் புதிய கடைகளை நிர்மாணித்துள்ளோம். இனிவரும் காலங்களில் அதனை பொதுமக்களுக்கு வழங்கி அதிலிருந்து சபையானது நிரந்தரமான வருமானத்தினை பெற்றுக்கொள்ளும்.

மேலும் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம், கழிவகற்றல் செயற்பாடு, குறிகட்டுவான் பயணிகள் படகு சேவைகளை ஒழுங்குபடுத்தல், மற்றும் வாகனத்தரிப்பிட ஒழுங்குபடுத்தல், சபைக்கு சொந்தமான பொதுச்சந்தைகள் மற்றும் கடைகளை குத்தகைக்கு விடல், சபைக்கு சொந்தமான வாகனங்களை வாடகைக்கு அமர்த்துதல் போன்ற செயற்பாடுகளினை சபையானது மேற்கொண்டு வருகின்றது.

மேலும் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறுபட்ட உதவித்திட்டங்களை சபையானது தொடர்ச்சியாக மேற்கொண்டும் வருகின்றது.

மயானங்களை பராமரித்தல், பொது வீதிகளை பராமரித்தல், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கின்ற பற்றைக்காணிகள் மற்றும் புதர்களை அப்புறப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்ற செயற்பாடுகளையும் சபையானது முன்னெடுத்து வருகின்றது.

மேலும் வருடந்தோறும் அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்படும் விஷேட தினங்களிற்கான அதாவது மரநடுகை, டெங்கு ஒழிப்பு, உள்ளூராட்சி வாரம், வாசிப்பு மாதம் போன்ற தினங்களிற்கான நிகழ்சித்திட்டங்களும் எம்மால் மேற்கொள்ளபட்டு வருகின்றது.

‘தன்நிறைவான தென் தீவகம்’ எனும் இலக்கினை நோக்கி சபையினை கொண்டுசெல்லும் நோக்கில் கடந்தகாலங்களில் பெற்றுக்கொண்ட அனுபவங்களினை அடிப்படையாகக் கொண்டும் 2024ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டமானது தயாரிக்கப்பட்ட நிலையில் சபையின் எதிர்பார்க்கப்படுகின்ற மொத்த வருமானமாக ரூபா.88,537,560.00 உம் செலவீனமாக ரூபா.80,238,560.00 உம் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்ற மிகையாக ரூபா.1,000.00 கணிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் சபையினால் பெற்றுக்கொள்ளக்கூடிய சொந்த வருமானமாக ரூபா.25,786,000.00 உம் அரசிறை மானியங்களாக ரூபா.62,751,560.00 உம் கிடைக்கப்பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சபையின் வருமான மூலங்களாகவும், அவற்றில் இருந்து கிடைக்கப்பெறும் வருமானங்களாகவும் நீதிமன்றத் தண்டப்பணம் ரூபா.3.5mn, நிலையான வைப்பு வட்டி ரூபா.1.8mn, முத்திரைத் தீர்வைக்கட்டணம் ரூபா.4.2mn, வியாபார உரிமைக்கட்டணம் ரூபா.0.7mn, கடை வாடகைக் கட்டணம் ரூபா.1.0mn, குடி நீர் விநியோகம் ரூபா.3.1mn, குத்தகை வருமானம் ரூபா.0.45mn, படகு வரி, தெருவோர வியாபாரம் ரூபா.0.70mn மற்றும் வாகனத்தரிப்பிடக்கட்டணம் ரூபா.0.15mn என்பன மதிப்பிடப்பட்டுள்ளது.
மதிப்பிடப்பட்ட சபையின் மொத்த செலவீனங்களில் சம்பளங்களும் கொடுப்பனவுகளுக்காக ரூபா.63.15mn, ஆக்கப்பொருட் செலவீனங்களுக்காக ரூபா.8.20mn, வழங்கு பொருட்களும் தேவைப்பொருட்களும் ரூபா.9.0mn மற்றும் மூலதனச் சொத்துக்களைப் பழுதுபார்த்தலும் பேணலும் ரூபா.4.8mn என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சபைக்குக் கிடைக்கப்பெறுகின்ற பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி மற்றும் சபை நிதி என்பவற்றின் மூலம் பிரதேசத்தினதும், சபையினதும் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து செல்லலாம் என எதிர்பாக்கின்றோம்.
மூலதன செலவீட்டிற்கான சபையின் பங்களிப்பாக ரூபா.8.30ஆn ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட விடயங்கள் தவிர்த்து தளபாட, உபகரணக் கொள்வனவிற்காகவும், வாகனத் திருத்தம், நூலகத்திற்கான புத்தகக் கொள்வனவு போன்றவற்றிற்காக இந் நிதி செலவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபையின் நிலையான வருமானங்கள் குறைவாகக் காணப்படுவதனால் அவற்றை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது. இதனொரு செயற்பாடாக சோலைவரி அறவீட்டிற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 2024 ஆம் ஆண்டளவில் கணிசமான அளவு வருமானத்தினை அதிகரித்துக்கொள்ள எண்ணியுள்ளோம்.
நடப்பாண்டில் கிடைக்கப்பெற்ற வேலைத்திட்டங்கள், பிரதேச சபையினை வலுப்பெறச் செய்வதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழான நிகழ்சித்திட்டங்கள் மற்றும் வீதிப்போக்குவரத்திற்கு இடையூறாகக் காணப்படுகின்ற கால்நடைகளைக் கட்டுப்படுத்தி பொதுமக்கள் அசௌகரியங்களின்றி போக்குவரத்தினை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் என்பவற்றை மக்கள் பயனுறும் வகையில் திறம்பட செயலாற்றிய வகையில் 2023 ஆம் ஆண்டிலும் கிடைக்கப்பெற்ற நிதி வழங்களைக் கொண்டு பயனுள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.
இதற்கு பயனாளிகளான பொதுமக்களின் பங்களிப்பினையும் ஒத்துழைப்பினையும் எமது சபை வேண்டிநிற்கின்றது. வரவு செலவுத்திட்டத்தினை உரிய காலத்திற்குள் தயாரித்து வடிவமைத்து வழங்கி உதவிய சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களிற்கும் மன மகிழ்வுடன் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மேலும் எமது பிரதேச அபிவிருத்திக்கு உதவிய சகல தரப்பட்ட அமைப்புக்களுக்கு நன்றியினை தெரிவிப்பதோடு இனிவரும் காலங்களிலும் இதுவரை வழங்கிவந்த ஆதரவினை தொடற்சியாக வழங்கி உதவுமாறு கேட்டு நிற்கின்றேன். எமது சபையானது நேரிய நிர்வாகம், மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பாதையிலே பயணிக்க ஏதுவான ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கி ஆக்கமும் ஊக்கமும் அளித்து, சபையானது திறம்பட இயங்குவதற்கு உறுதுணையாக அமையும் உள்ளூராட்சி ஆணையாளர் அவர்களுக்கும், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கும், ஆய்வு உத்தியோகத்தர் மற்றும் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோருக்கும் அரச கணக்காய்வு மற்றும் மாகாணக் கணக்காய்வு உத்தி;யோகத்தர்களுக்கும் வேலணை பிரதேச சபை சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

திரு.தி.தியாகச்சந்திரன்,
செயலாளர்,
பிரதேச சபை,
வேலணை.